பக்கவாதத்திற்க்கான அறிகுறிகள்: தெரிந்து கொள்வது யார் உயிரையேனும் காப்பாற்ற உதவும்…
மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலோ, அல்லது வெடிப்பு ஏற்பட்டாலோ பக்கவாதம் ஏற்படுகிறது.
சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சையே இதற்க்கான சரியான தீர்வு.
நினைவிருக்கட்டும், ஒவ்வொரு நிமிட தாமதமும் தீவிர பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
நம்மில் பெரும்பாலானோர் பக்கவாதத்திற்க்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளாமல் இருப்பதும், சரியான நேரத்தில் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பதுமே பக்கவாதம் தீவிரம் அடைவதற்கு காரணம் என்று காவேரி மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் தலைவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் Dr. Jos Jasper அவர்கள் கூறுகின்றார்.
FAST – என்ற சுருக்க வார்த்தையை நியாபகம் வைத்துக்கொள்வதன் மூலம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு உங்களால் உதவ முடியும்
F – Face முகத்தின் ஒரு பகுதி உணர்விழந்து தொங்குவதை போல் இருந்தால்
A – Arm ஒரு கை மட்டும் வலுவிழந்து மரத்துப்போனது போல் உணர்ந்தாள், பாதிக்கப்பட்டவரை இரண்டு கைகளையும் உயர்த்தச்சொல்லவும் ஒரு கை சரியாக உயர்த்த இயலாமல் கீழ் நோக்கி சென்றால்
S – Speech பேச்சில் தடுமாற்றம் அல்லது உளறல் இருந்தால், பாதிக்கப்பட்டவர் பேசுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
T – Time to Act மேற்கண்ட மூன்று அறிகுறிகள் தென்பட்டால் இது செயல்பட வேண்டிய நேரம் ஆகும். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும்.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவரை 4½ மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அவரை முழுவதுமாக குணப்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம் என்றும் அவரால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்றும் Dr. Jos Jasper அவர்கள் கூறுகின்றார்.
யாருக்கெல்லாம் பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது?
உடல் பருமனாக உள்ளவர்கள்:உடல் பருமனாக உள்ளவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம், மேலும் அதிகப்படியான கொழுப்பு பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
இருதய நோயாளிகள்: இருதய நோய் உள்ளவர்களுக்கு பிறரை காட்டிலும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 6 மடங்கு அதிகம் உள்ளது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சாதாரண நபரை காட்டிலும் பக்கவாதம் வரும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் உள்ளது
மது அருந்துபவர்கள்: அதிகப்படியாக மது அருந்துபவர்களுக்கு இருதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்
புகை பிடிப்பவர்கள்: புகை பிடிப்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
வரும்முன் காப்பது எப்படி?
பல்வேறு காரணங்களும், உணவு பழக்க வழக்கங்களாலும் நமது வாழ்க்கை இயந்திரமயமாக மாறிவிட்டது. தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி நம் ஆரோக்கியத்திற்கு சில சமயம் கேடாகவே அமைகிறது.
சீரான உடற்பயிற்சி, தினந்தோறும் நடை பயிற்சி போன்றவை நம்மை பக்கவாதத்திலுருந்து பாதுகாக்கும்.
Comments
Post a Comment